நட்புக்கு ஒரு இலக்கணம் இவன்தான்! அனுபவ பதிவுஇந்த பதிவு என்னுயிர் நண்பன் சிரோன்மணிக்கு சமர்ப்பணம்!!

சிரோன்மணி...! திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, அங்கேயே வளர்ந்து சென்னை, திருச்சியில் சிலபல அனுபவங்களை பெற்று இன்று துபாயில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு நல்ல ஆத்மாவின் பெயர்தான் இது!! ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை நானும், அவனும் எங்களது சொர்க்கபூமியான பெத்தநாடார்பட்டி எனும் கிராமத்தில் உள்ள டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தோம். அதன் பின்னர் அவனுடைய ட்ராக் ஒருபுறமும், என்னுடைய ட்ராக் இன்னொரு புறமும் மாறிவிட்டது.

நான் படித்துவிட்டு 1998ல் வேலைக்காக ‌வேலூர் சென்றேன். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு டிரான்ஸ்பர். மயிலாப்பூரில் தங்கியிருந்தேன். அப்போது சிரோன்மணியும் சென்னைக்கு ‌பணிநிமித்தமாக வந்தான். சிரோ சென்னை வந்திருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் அவனை ‌பார்க்க வேண்டும் என நினைத்ததோடு சரி... ஆனால் அவனை நேரில் சென்று பார்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் உடனடியாக எடுக்கவில்லை. அதேநேரம் என் சிரோ நான் இருக்கும் இடத்துக்கே தேடி வந்து என்னை பார்த்தான். அவனுள் எத்த‌னை மாற்றங்கள். பார்த்து பூரித்து விட்டேன். எங்களூடன் பள்ளியில் படித்தவர்களிலேயே சிறுவன் போல காட்சியளித்த சிரோன்... தோற்றம் மாறாமல் இருந்தான். ஆனால் அவனது பேச்சில் சிலபல அனுபவ வார்த்தைகளை கேட்டேன்.

அவன் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கியிருந்தான். மேன்சனில் கஷ்ட நஷ்டங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டான். சரி... விடு டா! விரைவில் நாம் இருவரும் சேர்ந்து ஒரு வீடு வாடகைக்கு பிடித்து அங்கு தங்குவோம் என்றேன். அதன்படி மந்தைவெளியில் வீடு பார்த்தோம். ஒரு நல்ல நாளாக பார்த்து இருவரும் அங்கு குடியேறினோம். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் வழக்கம்போலவே ஓட்டல்களில் சாப்பிட்டோம். சம்பள நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம். சம்பளம் வந்ததும் மண்எண்ணெய் ஸ்டவ் மற்றும் பாத்திரங்கள், மளிகை சாமான்கள் என் சமைப்பதற்கு தேவையான அத்தனையும் வீட்டில் ஆஜர்.

வீட்டில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு, சமைத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதே? அந்த இனிமையான பொழுது இனியொருமுறை கிடைக்குமா? என்ற ஏக்கம் இன்னும் என்னுள் எழத்தான் செய்கிறது. காலையில் நான் எழுவதற்குள் அவன் எழுந்து விடுவான். கடைக்கு போய் பால் வாங்கி வந்து, காபி போட்டு விட்டு என்னை எழுப்புவான். (ஒருநாள் கூட அவனுக்கு நான் காபி போட்டுக் கொடுத்தது கிடையாது. அவனுக்கு முன்னாள் எழுந்ததும் கிடையாது.) எனக்கு பெரிய அளவில் சமைக்க தெரியாது. ஆனால் சிரோன் சமையலில் செம கில்லாடி. நான் ஏதாவது செய்கிறேன் என்றால்கூ‌ட நீ பாட்டுககு சும்மா இரு. நான் பார்த்துக்கிறேன் என்பான். நான் விடாப்பிடியாக இருந்து காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன் என்கிற‌ பெயரில் காரட்டை கடித்துக் கொண்டிருப்பேன். கொஞ்ச நாளில் எனக்கும் சமைக்கத் தெரிந்து விட்டது (உபயம் சிரோ). இன்று நான் நன்றாக சமைத்து என் மனைவியிடம் நற்பெயர் (?) எடுத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நண்பன் சிரோதான்...!

சிரோவிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் என்று சொன்னால் அவனுடைய பொறுமை முதலில் பிடிக்கும். நான் எதையும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்கிற ரீதியில்தான் பேசுவேன். எந்த காரியத்‌தையும் அப்படித்தான் செய்து கொண்டிருப்பேன். ஆனால் அவனோ... எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்த்து பொறுமையுடன் செய்வான். என்னிடமும் அடிக்‌கடி அந்த அட்வைஸைத்தான் சொல்வான். அடுத்து குறிக்கோள்...! முயற்சி செய்... அதற்கான பலன் இன்று கிடைக்காவிட்டாலும் என்றாவது கண்டிப்பாக ஒருநாள் கிடை‌க்கும் என்று அடிக்கடி சொல்வான். அவனது இந்த வார்த்தைகள்தான் என்னை இன்றும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சென்னையில் பணியாற்றிய அவனுக்கு திருச்சியில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் வாங்கியதை விட இரண்டுமடங்கு அதிக சம்பளம். ஆனால் அவனது மனது குழப்பத்தில் இருந்தது...! நண்பனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, திருச்சி செல்வதா, வேண்டாமா? என்பதுதான் அந்த குழப்பம். ஒரு நாள் இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவன் என்னிடம், என்ன செய்வதென்று புரியவில்லை என்று புலம்பினான். இங்க நாம இப்படி ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கோம். திருச்சிக்கு போனா இந்த எஞ்சாய்மெண்ட் எல்லாம் போயிடும்...! திருச்சிக்கு... போகவா? வேண்டாமா என குழப்பமாக இருக்கிறது என்றான். எதற்குமே புலம்பாதவன்... ஏன் இப்படி புலம்புகிறான் என எனக்கு தோன்றியது. எனக்கும் அவனைப் பிரிய மனமில்லை...! இருந்தாலும் அவனது எதிர்காலத்தை மனதில் வைத்து..., டேய்... எங்கடா போற... திருச்சிக்குத்தானே...! நினைச்சா 6 மணி நேரத்தில் சென்னை வரலாம்... நானும் திருச்சி வரலாம்..., எதிர்காலத்தை முதலில் பார்... என்று முதன் முதலில் நான் அவனுக்கு அ‌ட்வைஸ் செய்தேன்.

அவனும் புறப்பட்டான்...! அங்கு சுமார் 2 ஆண்டுகள் வரை வேலை பார்த்த அவனது மனதில் அடுத்த லட்சியம் தொற்றிக் கொண்டது. வீட்டின் கஷ்‌டத்தை தீர்க்க... சீக்கிரமே இன்னும் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும் என எண்ணினான். ஒரே மாதத்தில் திருச்சியில் இருந்து ஐந்தாறு முறை சென்னைக்கு வந்தான். பல இன்டர்வியூக்களில் பங்கேற்றான். அவனது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இன்று துபாயில்... நல்ல நிலையில்... இருக்கிறான். அவனது அம்மா, அப்பா, அண்ணன்கள், சகோதரி என அத்தனைபேரின் கண்களிலும் சிரோ துபாய் போகிறான் என நினைத்து ஆனந்த கண்ணீர் வடிந்தது. நானும் பெருமைப்பட்டேன். என்னுடன் படித்த நண்பர்களில், என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்த நண்பர்களில் முதன் முறையாக ஒருவன் வெளிநாட்டுக்கு செல்கிறான் என நினைத்தபோது என்மனம் ஆகாயத்தில் பறந்தது. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால்...

துபாய் போய் சேர்ந்ததும் அவன் நல்லபடியாக வந்திறங்கியதை போனில் தெரிவித்தான். அடுத்த சில தினங்களில் அவனிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அவன் அங்கு நல்ல நிலையில் இல்லை... என்பது அவனது குரல் காட்டிக் கொடுத்தது. துபாயில் தங்கு‌வதற்கு இன்னும் இடம் செட் ஆகவில்லை, சாப்பாடு சரியில்லை என சிலபல குறைகளை சொன்னான். என் கண்களில் கண்ணீர் வடிந்தது. (வேலைக்காக துபாய் சென்று எத்தனையோ பேர் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்ட சம்பவங்களை பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்). அதுமாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது என மனமுருக என்னிஷ்ட தெய்வம் முருகனிடம் வேண்டினேன். அடுத்து சில தினங்களில், நான் நல்லா இருக்கிறேன் டா! கவலைப்படாதே... என மெயில் சிரோ அனுப்பினான். அப்பாடா... என நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

அதன் பிறகு ஓராண்டு கழித்து ஆடி மாதம் கோயில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தான். (எங்கள் ஊரில் இருக்கும் அருள்‌மிகு மாயாண்டி கோயில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி நடைபெற இருக்கிறது. திருவிழா முடிந்த பின்னர், திருவிழா அனுபடங்களை எழுதுகிறேன்). அவனது வீட்டில் எல்லோரும் ஆஜர். நானும் ஆஜரானேன். அப்பா, அம்மா மற்றும் சொந்தபந்தங்கள் ‌சிரோனைப் பார்த்து பெருமைப் பட்டதை நினைத்து நானும் ‌பெருமைப்பட்டேன். அவன் சாதித்து விட்டான்...! எங்கள் கிராமத்தில் மேலும் சிலர் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றினால், அந்த நாட்டு பிரஜையாகவே வசித்து வந்தாலும், அவர்கள் எல்லோரையும் விட குறைந்த வயதுடைய சிரோன்மணி துபாய் சென்று திரும்பியது எனக்கு பெருமிதமாகவே தோன்றியது. அதன் பிறகு சிரோனின் அண்ணன் திருமணத்துக்கு அவன் வந்தான். எனது அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காததாலும், அவன் கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததாலும் என்னால் அவனையும், அவனால் என்னையும் சந்திக்க முடியாமல் போய் விட்டது...!

அடுத்து சிரோ எப்போது வருவான்? என் கேள்வியுடன் நட்புக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த நண்பனுக்காக காத்திருக்கிறேன்.

இந்த நீண்ட பதிவை படித்த நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் எனதன்பு நண்பன் சிரோவைப் போல நண்பன் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உண்மையான நட்பு மட்டுமே எதையும் எதிர்பாராமல் தொடர்வது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அந்த உண்மையான நட்புக்கு பெருமை சேர்ப்போம். சந்தோஷப்படுவோம்...!

இந்த பதிவு என்னுயிர் நண்பன் சிரோன்மணிக்கு சமர்ப்பணம்!! என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்...!

பெற்ற தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி! கண்டிப்பா படியுங்க!!


முதலில் நடுத்தரவர்க்க குடும்பத்தை ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சண்டையின் உரையாடலை படியுங்கள்..!

மகள் : அம்மா எங்க காலேஜ்ல டூர் போறோம். எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும். எங்க க்ளாஸ்ல எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கப் போறோம். அதுக்கு 500 ரூபாய் வேணும்.

தாய் : சும்மா... சும்மா... பணம்... பணம்னு கேட்டு நச்சரிக்காதே..! பொம்பள புள்ளய காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சிட்டு இருக்கிறதே பெரிய விசயம்.

மகள் : எனக்கு நாளைக்கு பணம் வேணும். இல்லாட்டி அவ்வளவுதான்!

தாய் : அதெல்லாம் தர முடியாது. என்ன செய்வியோ செஞ்சிக்கோ...!

மகள் : என்ன நீ...! பெத்த பொண்ணு சந்தோஷமா டூர் போறதுக்கு கூட பணம் தர மாட்டேங்கிற...! இந்த சந்தோஷத்த கூட தர முடியாத நீ எதுக்கு என்னை பெத்த(?)

தாய் : ஏன்டீ சொல்ல மாட்டே...! ஒன்ன பத்து மாசம் கஷ்டப்பட்டு சொமந்து பெத்து வளர்த்ததுக்கு நல்லா கேட்குற கேள்வி.

மகள் : ஆமாமா... பெருசா பெத்துட்டா... ஊர் உலகத்துல எவளும் பெத்துக்கலியா?

- இப்படியே தாய் மகளுக்கு இடையே சண்டை நீண்டு கொண்டே போகும். இதேபோல நம்மில் பலரும் தாயிடம் சண்டை போட்டிருக்கலாம். அப்படி சண்டை போட்டவர்களுக்காகவும், இனி இதுபோல யாரும் தாயைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கக்கூடாது என்பதற்காகவும்தான் இந்த பதிவு...!

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் எனது மனைவியின் வயிற்றில் ஒரு சிசு உருவான நாள் முதல் அந்த சிசு இந்த பூவுலகை கண் விழித்து பார்த்த நாள் வரை 9 மாதம் 9 நாட்கள் (பத்து மாசம்னு சொல்வழக்கு இருந்தாலும் 9 மாசம் 9 நாள்தான் குழந்தை தாயின் கருவறைக்குள் இருக்கும்) என்னென்ன கஷ்டப்பட்டாள் என்பதை நேரில் பார்த்ததற்கு பிறகு இனி என் தாயிடம் எந்த விஷயத்திலும் கோபப்படக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஆம் நண்பர்களே..! ஒரு ஆணால் செய்ய முடியாத காரியங்களில் குழந்தையை வயிற்றில் சுமந்து குழந்தையை பெற்றெடுப்பது ஒன்று. ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நாள் முதல் அவள் தன்னையும் அறியாமல், வயிற்றில் வளரும் சிசு மீது ஒரு தனிக்கவனம் செலுத்தத் தொடங்குகிறார். கரு உருவான இரண்டாவது மாத இறுதியில் இருந்து அந்த பெண்ணால் சரியாக சாப்பிட முடியாது. எந்த உணவை சாப்பிட்டாலும் குமட்டும். சாப்பிட்ட ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அந்த உணவு வாந்தியாக வெளியே வந்து விடும். இந்த குமட்டல் 6 அல்லது 7 மாதங்கள் வரையோ... சிலருக்கு குழந்தை பிறக்கும் நாள் வரையிலோ நீடிக்கலாம்.

குமட்டல் முதல் பிரச்சினை என்றால் குழந்தை வளர வளர வயிறு பெரிதாகும். அந்த சமயத்தில் அவர்களால் நிம்மதியாக படுத்துறங்க முடியாது. நான்காவது மாதம் முதல் வயிறு பெரிதாகத் தொடங்கும். அன்று முதல் குழந்தை பிறக்கும் நாள் வரை அவர்களால் எந்த பக்கத்தில் சாய்ந்து படுத்தாலும் வயிற்றில் வலி ஏற்படுமாம். அதுவும் ஏழாவது மாதம் முதல் குழந்தைக்கு வசதிப்படும் வகையில்தான் படுக்க முடியும். அப்படி நேர்மாறாக படுத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்கத் தொடங்கி விடும். அந்த சுகமான அனுபவத்துக்காக ஏங்கி காத்திருப்பாள் அந்த தாய்.

கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை பிறக்கும் நாள் நெருங்கி விட்டால், அந்த தாயின் மனதில் பயம் தொற்றிக் கொள்ளும். எத்தனை எத்தனையோ நம்பிக்கைகளை அவர்கள் மனதில் புகுத்தினாலும், ஒருவித பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். குழந்தை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம், நல்லபடியாக நார்மலாக குழந்தை பிறக்குமா என்ற கேள்வி வேறு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி பிறக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒரு பக்கமென்றால், குழந்தை பிறந்த பிறகு அதனை எப்படி வளர்ப்பது என்ற டென்ஷன் இன்னொரு புறம் என மனதை குழப்பிக் கொண்டேதான் இருக்கும்.

ஒருவழியாக நார்மலாகவோ, சிசேரியன் ஆபரேஷன் மூலமாகவோ குழந்தை பிறந்து, குவா குவா சத்தம் காதில் விழுந்த பின்னர்தான் அந்த தாய் நமக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது என நினைத்து பூரிக்கிறாள்.

குழந்தை பிறக்கும் தருவாயில் பெரும்பாலான பெண்கள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்களாம். அந்த அரை மயக்கத்திலும் தாயை எழுப்பி, குழந்தையின் முகத்தை காட்டி விட்டுதான் டெலிவரி ரூமில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவார்கள் மருத்துவமனை செவிலியர்கள்.

இப்படி உண்ணாமல், உறங்காமல் பெற்றெடுத்து, வளர்த்த (குழந்தை வளர்க்கும்போது ஏற்படும் சந்தோஷங்கள் மற்றும் சிரமங்களை வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்) குழந்தை வளர்ந்து பெரிய ஆளான பின்னர் என்னை ஏன் பெற்றாய் என்று கேட்டால், அந்த தாயின் மனது எவ்வளவு கஷ்டப்படும் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவான பின்னரும் என் தாய்க்கு இன்னமும் நான் குழந்தையாகவே தெரிகிறேன் என்பதை அவர்கள் எனக்கு போனிலும், நேரில் செல்லும்போதும் சொல்லும் அட்வைஸ்களில் இருந்தே நெரிந்து கொள்ளலாம். வேலாவேளைக்கு நன்றாக சாப்பிடு, உடம்பை பார்த்துக் கொள், ரோட்டை கிராஸ் பண்ணும்போது பார்த்து போகணும், வண்டியில் வேகமா போகாதே என்று சின்ன பையனுக்கு சொல்வது போல இன்னமும் எனக்கு அட்வைஸ் மழையை பொழிந்து கொண்டிருப்பார்கள்.

என்றென்றும் பிள்ளைகளுக்காக வாழும் அந்த மனித தெய்வத்தைத் பார்த்து, என்னை ஏன் பெற்றாய்? என்று கேட்பதை இனியும் தொடராதீர்கள் நண்பர்களே!!!

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்?


இரவு நன்றாக தூங்கினால் காலை நேரத்தில் பலருக்கும் கண்களில் புரை வந்து விடும். அதனை எடுப்பதற்காக கண்களை கசக்கினால், கண்கள் சிவந்து காணப்படும். இன்னும் ஒருசிலர் அழுது விடுவார்கள். ஏன் தெரியுமா? கண்களை கசக்கும் போது சுகமாக இருக்கிறது என்று பலரும் அழுத்தமாக கசக்கி விடுவார்கள்.

எனது தோழியும் அழகுக்கலை நிபுணருமான செல்வி.சுவீதா (பாளையங்கோட்டை), கண்களை பாதுகாக்கவும், கண்கள் அழகாகவும் எனக்கு சொன்ன சில டிப்ஸ்கள்... உங்களுக்காக...!!!

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.

* டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.

* படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.

* உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.

* கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.

* கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும்.

* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

ஜே.கே.ரித்தீஷூக்கு கருணாநிதி கண்டிப்பு : பிளாஷ் நியூஸ்


சாதாரண டீக்கடைக்காராக இருந்து பின்னர் எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு (?) சினிமாவிலும் நுழைந்து ஒருவழியாக தனது இலக்கான அரசியலில் களமிறங்கி, மக்கள் ஆதரவுடன் (?) பதவியும் பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறார் அதிரடி நாயகன் ஜே.கே.ரித்தீஷ்.

ரித்தீஷ் எம்.பி. ஆவதற்கு முன்பு ராமநாதபுரம் தொகுதி மக்கள் எல்லோரும் அவரை பாராட்டினார்களோ இல்லியோ... இப்ப பாராட்டிக்கிட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த வீரத்தளபதியின் அதிரடிதான். ஜே.கே.ரித்தீஷ் கடந்த வாரம் அங்குள்ள லோக்கல் கேபிள் டி.வி.,யில் அதிரடியாக ஒரு நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் பொதுமக்களின் பிரச்‌சினைகளுக்கு உடனடி தீர்வு காண வழிவகுத்தார். இதுதொடர்பான செய்தி இன்றைய தினமலரில் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை படிச்சதும்... அடடா பரவாயில்லியே நம்ம ரித்தீஷ் கலக்குறாரு என நினைத்த நான் உடனடியாக ராமநாதபுரத்தை சேர்ந்த என் நட்பு வட்டாரத்தில் வீரத்தளபதியின் வீர நடவடிகைகள் பற்றி விசாரிச்சேன். அப்போது நண்பர் சொன்ன தகவல்களை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையிலேயே ரித்தீஷ் எம்.பி.ஆனதுக்கு நாங்க ரொம்ப பெருமைப்படுறோம். போன வாரம் சனிக்கிழமை (6ம்தேதி) ஈவினிங் லோக்கல் டி.வி.யில 3 மணி நேரம் லைவ் டெலிகாஸ்ட் புரோகிராம் நடந்தது. ரித்தீஷிடம் பொதுமக்கள் பேசலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த புரோகிராமில் பலர் பேசினார்கள். மூணு மணி நேரமும் முதல்வன் படம் பார்த்த மாதிரியே இருந்திச்சி.

எங்க ஏரிவுக்கு தண்ணீ வரவே ஒரே ஏரியாவுல இருந்து நாலைஞ்சு கால்கள் வநதன. அதுவரைக்கும் சிரிச்சுக்கிட்‌டே பதில் சொன்ன ரித்தீஷ், ‌கடுப்பாகி... உங்க ஏரியா கவுன்சிலர் இன்னும் கொஞ்சம் நேரத்துல இங்க வருவார். அவரிடமே நீங்க கேளுங்க என்றார். என்ன ஆச்சர்யம்... சற்று நேரத்திற்கெல்லாம் கவுன்சிலர் லோக்கல் டி.வி.க்குள் ஆஜர். அடுத்து தண்ணீர் பிரச்சி‌னை குறித்து ஒரு கால். அந்த காலை அட்டர்ன் பண்ணியவர் கவுன்சிலர். நாளைக்கே சரி செய்து விடுகிறேன் என்று பதில் சொன்னார் கவுன்சிலர். அப்போது இடைமறித்த ரித்தீஷ், நாளைக்கு உங்களால சரி பண்ண முடியுமா? என்று கவுன்சிலரிடம் கேட்டதுடன், நாளைக்கு சரி பண்ணலன்னா எல்லாரும் சேர்ந்து இந்த கவுன்சிலர அடிங்க...!ன்னு சிரிச்சுட்டே ‌சொன்னார். நொந்து போன கவுன்சிலர்... சார்... பத்து நாளுல எங்க ஏரியாவுல தண்ணீர் பிரச்சினை இல்லாம பார்த்துக்கிறேன்... என்றார். இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே..!ன்னு ரித்தீஷ் பஞ்ச் பேசினார்.

அடுத்து ஒரு கல்லூரியில் பீஸ் கட்ட முடியாத மாணவர் பேசினார். பீஸ் கட்ட வசதி இல்லன்னு சொன்னார். உடனே அந்த கல்லூரி முதல்வரிடம் போனில் பேசிய ரித்தீஷ் மாணவனுக்கான பீஸை தானே கட்டுவதாக உறுதி கூறினார். இப்படி பல மாணவர்களுக்கு உதவி செய்தார். அடுத்தடுத்து கால்கள் வந்துகொண்டேஇருந்தன. அனைத்திற்கு ரித்தீஷ் பொறுமையுடன் பதில் சொன்னார். கடைசியில் ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன். பொதுமக்கள் என்னுடன் போனில் பேசி தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என்று சொன்ன ரித்தீஷ், தனது ‌பர்சனல் செல்நம்பர், வீட்டு நம்பர், ஆபீஸ் நம்பர், அடரஸ் என எல்லாவற்றையும் வழங்கினார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், ஒரு முதியவர் வந்து சார்... என்றார். ரித்தீஷும்... என்ன ஐயா..., என்று கேட்டார். அந்த பெரியவர், ஐயா... நான் இந்த லோக்கல் டி.வி.,யில் செக்யூரிட்டியா வேலை பார்க்குறேன். எனக்கு சரியா சம்பளம் தர்றது இல்ல. என்னோட பேத்தி படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படுது... என்று அடுத்தடுத்து கோரிக்கைகளையும், புகார்களையும் அடுக்கிக் கொண்டே போனாராம். அப்போது இடைமறித்த ரித்தீஷ்... இதே என் பக்கத்துலதானே உங்க ஓனர் இருக்கார். அவரிடமே சம்பளம் கேளுங்க... என்று கேமராவை கேபிள் டி.வி., ஓனர் பக்கமா திருப்பச் சொன்னார். என்ன செய்‌வதென்று தெரியாமல் நெழிந்தார் கேபிள் ஓனர். கடைசியாக... செக்யூரிட்டியின் பேரன் படிப்புச் செலவுக்கு பணம் கொடுத்து உதவினார் ரித்தீஷ்.

ரித்தீஷ் இப்படி அதிரடியாக கலக்கிக் ‌கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி ரொம்பவே நொந்து விட்டாராம். கடுப்பான அவர், ரித்தீஷை போனில் கூப்பிட்டு கண்டித்ததாக ராமநாதபுரத்தில் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட விழாவினை முன்னிட்டு பத்திரிகைகளுக்கு கொடுத்த விளம்பரத்தில் ரித்தீஷின் பெயர் இடம்பெறவில்லை. (ஒரு தொகுதியில் அரசு விழா நடக்கும்போது லோக்கல் எம்.பி.,யின் பெயர் அரசு விளம்பரங்களில் இடம்பெற வேண்டும் என்று ஒரு விதி உண்டாம். அது எதிர்க்கட்சி எம்.பியாக இருந்தாலும் சரி...!)

அடுத்த மாதம் ரித்திஷின் லைவ் புரோகிராம் இருக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. பதிவுலக நண்பர்களே... அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதற்காக இப்படி நல்லது செய்பவர்களையும் கண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

டாக்டர் ராமதாஸ் பாணியில் இளையதளபதி விஜய்


ரஜினி ரசிகர்களாக இருக்கட்டும், கமல் ரசிகர்களாக இருக்கட்டும், விக்ரம் ரசிகர்களாக இருக்கட்டும், விஜயகாந்த் ரசிகர்களாக.. சாரி... தொண்டர்களாக இருக்கட்டும் எல்லாத்துக்கு பிடிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் யாரென்று கேட்டா.... டாக்டர் ராமதாஸ் என்று டக்குனு சொல்லலாம். (அப்ப.. இந்த தலைவர்களுக்கெல்லாம் ராமதாஸ பிடிக்குமான்னு ஏடாகூடமான கேள்வியெல்லாம் கேட்கப்படாது).

சினிமாத்துறை இந்த ராமதாஸ் கொஞ்சம் நெஞ்சமா வாரித் தள்ளியிருக்கார். இவர் ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களை நேரடியாக, பகிரங்கமாக விளாசித் தள்ள... இவரது மகன் அன்புமணி ராமதாஸ் (முன்னாள் மத்திய அமைச்சர்) இன்னொரு புறம் இந்திய சினிமாவையே புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது ஒரு காலம்...!

ஆனா... இப்ப அதுவல்ல மேட்டர்...!

ஜூன் 22ம் தேதி தமிழகத்தில் இன்னொரு கட்சி முளைக்கப் போறதா தகவல்கள் இணைய உலகிலும், பத்திரிகை உலகிலும் உலாவிக்கிட்டு இருக்கு. அந்த உலாவல்லயே இன்னொரு தகவலும் சொல்றாங்க. அதாகப்பட்டது... இளையதளபதி தான் ஆரம்பிக்கப் போற கட்சிக்கு நிறுவன தலைவரா மட்டும் (இப்ப புரியுதா ராமதாஸ் பாணின்னு ஏன் சொன்னேன்னு) இருப்பாராம். மற்ற எல்லா வேலைகளையும் தளபதியோட அப்பா சந்திரசேகரும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் சேர்ந்து கவனிச்சுக்கப் போறாங்களாம்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிச்சு... அடுத்த சட்டசபை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா... தமிழ்நாட்டோட கதி என்ன ஆகும்னு யாருக்காவது யூகிக்க முடியுதா? அப்படி யூகிக்கிற விஷயத்தை பின்னூட்ட பொட்டியில போட்டு அலசுங்க மக்கா!

கவர்ச்சியை பார்த்து ஏமாந்துடாதீங்க...! ஒரு உஷார் ரிப்போர்ட்


ஒரு காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்‌வொரு கடைக்கு சென்று வந்த நிலை மாறி, இன்று மால் என்ற பெயரில் எல்லாமும் ஒரே இடத்தில் என்கிற நிலை உருவாகி வருகிறது. சென்னையில் தொடங்கி குமரி முனை வரை எல்லா இடங்களிலும் மால் கலாச்சாரம் பெருகி விட்டது. இந்த மால்களால் எந்த அளவுக்கு பயன் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பின்மையும் இருக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம் வாசகர்களே...! இந்த மால்களில் சமையலுக்கு பயன்படும் எண்ணெய் முதல் நொறுக்குத்தீனி வரை எல்லாமுமே பல வண்ண வண்ண பாக்கெட்டுகளில் இருப்பதால் அவை பலரையும் வாங்கத்தூண்டுகின்றன. இந்த கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளை பார்க்கும்லோதே ஒரு முறை வாங் பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்று பலரும் நினைக்கின்றனர். நூற்றுக்கணக்கில் பணத்தை கொடுத்து வாங்கியும் செல்கிறார்கள். தரமான பொருட்கள் எவை என்று தெரியாமல் கவர்ச்சி பாக்கெட்டுகளை பார்த்து உணவுப்பண்டங்களையும், உணவுப்பொருட்களையும் அள்ளிச் செல்லும் பெண்கள், இந்த ரெடிமேட் பாக்கெட்டுகளால் சமையலும், சகலமும் சுலபமாகி விடுகிறது என்கிறார்கள்.

ஆனால் அந்த ‌பொருளின் மூலம் எந்த அளவுக்கு கொழுப்பு உட்பட தேவையற்ற சத்துக்கள் உடலுக்குள் போகின்றன என்று யாருக்கும் தெரியாது. பாக்கெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களையும் யாரும் படிப்பதில்லை என்பதே வே‌தனையான உண்மை.

சரி.. மால்களில் எப்படித்தான் பொருட்களை வாங்குவது? கொழுப்பு குறைந்த, சர்க்கரை இல்லாத பண்டங்களும் பாக்கெட்டுகளாக மால்களில் கிடைக்கும். டயட் பொடேட்டோஸ், கொலஸ்ட்ரால் குறைந்த கொட்டை வகைகள், கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய், சோயா பொருட்கள், சர்க்கரை இல்லாத சாக்லெட், ஹெல்த் டிரிங்ஸ், ஓட்மீல், ஆர்கானிக் பருப்புகள் போன்றவை விற்கப்படுகின்றன. இவற்றில் உள்ள சத்துக்கள் எல்லாம், பாக்கெட்டில் போட்டபடி இருக்கும் என்று நம்ப முடியாது; அதனால், தரமான நிறுவனங்களின் தயாரிப்பு தானா என்று பார்த்து வாங்குவதும் முக்கியம்.

பல ஆண்டுக்கு முன்பு விவசாயிகள், உரம், பூச்சி மருந்து போடாமல் பயிர் செய்தனர். ஆனால் இப்போது...? விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்று, உரம், பூச்சி மருந்துகளை பயன் படுத்தப்படுகின்றன. தற்சமயம் நாம் சாப்பிடும் கீரையில் இருந்து தானியங்கள், பழங்கள் வரை அனைத்துமே உரம் பாய்ந்ததுதான். இதனை உணர்ந்து கொண்ட அமெரிக்கர்கள் மத்தியில் இப்போது கொடிகட்டிப் பறப்பது ஆர்கானிக் புட்தான். இயற்கையான இந்த ஆர்கானிக் புட் இன்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. சாதாரண உணவில் இருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களின் விலை 50 முதல், 100 சதவீதம் அதிகம். தக்காளியில் இருந்து அரிசி வரை எல்லாம் உரம் போடாமல் பயிராக்கி தரப்படுகிறது.
அப்படிப்பட்ட உணவுகளில், வைட்டமின், கனிமம், புரதம் எல்லாம் முழுமையாக கிடைக்கும். இந்த வகை உணவுகளும் பெரும்பாலான மால்களில் விற்கப்படுகின்றன. அவற்றை பார்த்து வாங்கி பயன்படுத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை.

பொதுவாக கவர்ச்சிகர சிப்ஸ் பாக்கெட்களில், இது ப்ரை பண்ணப்பட்டதல்ல, பேக்டு செய்யப்பட்டது. அதனால், கொழுப்பு இருக்காது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில், நிலைமை அப்படியல்ல. உருளை போன்ற சிலவற்றில் அடிப்படையில் உள்ள கொழுப்பு சத்தை, வேக வைப்பதன் மூலம் நீக்கி விட முடியும் என்று சொல்ல முடியாது. பொரித்தால்தான் கொழுப்பு; வேக வைத்தால் இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் டாக்டர்கள் கருத்து. அதனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல் இருப்பதும் நல்லது.

திருவண்ணாமலை கிரிவல மகிமையும், என் அனுபவமும்


உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இல்லாத புகழ் ஒன்று நம் தாய்த் தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு இருக்கிறது என்றால் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே...! பொதுவாக கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டால்தான் புண்ணியம், முக்தி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் கோயிலையும், அந்த கோயில் உள்ள தெய்வத்தையும் நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஆச்சர்யமான விஷயமே!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைப் பற்றி இதற்கு முன்பு அறிந்தவர்களுக்கு நான் சொல்லும் தகவல்கள் தெரிந்திருக்கக் கூடும். இன்னமும் அண்ணாமலையாரைப் பற்றி அறியாத நண்பர்களுக்காகத்தான் இந்த அனுபவக் கட்டுரை.

திருநெல்வேலிக்காரனான எனக்கு சிறுவயதில் எல்லாம் அண்ணாமலையாரைப் பற்றி எதுவும் தெரியாது. ஏன்... திருவண்ணாமலை என்று ஒரு ஊர் இருக்கிறது என்று கூட தெரியாது. படித்து விட்டு வேலைக்காக முதன் முதலில் நான் சென்ற ஊர் வேலூர். வேலூர், திருவண்ணாமலை எல்லாம் அந்தக்கால வட ஆர்க்காடு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் என்று ஒரு புனித நடை பயணத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் என்ற செய்தியை தினத்தந்தியில் படத்துடன் போட்டிருந்தார்கள். அதனை படித்து பூரித்து விட்டேன். புதிதாக சேர்ந்த அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் சிலரும் கிரிவலத்துக்கு சென்று திரும்பினார்கள். விடிய விடிய கண்விழித்து அண்ணாமலையார் இருக்கும் திருவண்ணாமலையை சுற்றி வந்ததாக சொன்னார்கள். டூட்டி முடிந்த பின்னர் புறப்பட்டு சென்ற அவர்கள் மறுநாள் காலையில் ரூமிற்கு வந்து சேர்ந்தார்கள். அதன் பின்னர் குளித்து விட்டு சற்றுநேரம் கூட தூங்காமல் மீண்டும் டூட்டிக்கு வந்து விட்டார்கள்.

என்ன நண்பா..? தூக்கம் வரலியா? என்று கேட்டதற்கு கிரிவலம் போனால் டயர்ட் இருக்காது! என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த மாதம் கண்டிப்பாக கிரிவலத்துக்கு நாமும் போய்விட வேண்டியதுதான் என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்து இரண்டு பவுர்ணமிகளில் என்னால் போக முடியவில்லை. ஒருவழயாக மூன்று மாதங்கள் கழித்து வந்த ஒரு பவுர்ணமி தினத்தில் கிரிவலத்துக்கு தயாரானேன். வேலூரில் இருந்து ஏகப்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை சென்று பார்த்தால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், தனியார் பஸ்கள், வேன், கார்களில் வந்து பக்த கோடிகள் குவிந்து கொண்டிருந்தார்கள்.

அண்ணாமலையார் கோயிலில் பிரதான கோபுரத்தில் தொடங்கி மலையை வலம் வர புறப்பட்டோம். அப்பப்பா... மலையை சுற்றிலும் 14 கி,மீ. சாலையிலும் பக்தர்களின் தலைகள்தான் தென்பட்டன. அப்படியே பிரமித்துப் போய் விட்டேன்.

கிரிவலம் முடிந்து வழக்கம்போல சாமி கும்பிட்டு விட்டு வேலூர் திரும்பினேன். இன்னொரு ஆச்சர்யம்...! எந்தவித டயர்டும் எனக்கு இல்லை. வழக்கம்போலவே பணிக்கு சென்றேன். அடடா... இப்படியரு சக்தியா அந்த அண்ணாமலையாருக்கு... என நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் கிரிவலத்துக்கு செல்ல வேண்டும் என நினைப்பேன். நேரம் மற்றும் பணிச்சுமை இல்லாத நாட்களில் பவுர்ணமி வரும்போது திருவண்ணாமலை போகத் தவறுவதில்லை.நினைத்தது நடந்தது

இப்படியே ஓராண்டுகள் ஓடின. நான் பணியாற்றிய அலுவலகத்தின் மேலாளருக்கும், எனக்கும் சிறு பிரச்சினை. மேனேஜரிடம் முறைத்துக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. எப்படியாவது எமது அலுவலகத்தில் வேறு கிளைக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்தேன். அதே (பகையாளி) மேனேஜரிடமே டிரான்ஸ்பர் வாங்கித் தருமாறு கேட்டேன். வசமா ஒருத்தன் சிக்குனா எந்த மேனேஜருக்குத்தான் பிடிக்காமல் போகும். நான் எழுதிக் கொடுத்த கோரிக்கை மனு கடிதத்தை அடுத்த நாள் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தேன். நேரடியாக நிறுவன இயக்குனருக்கு தபாலில் டிரான்ஸ்பர் கேட்டு கடிதம் எழுதினேன். நோ... ரிப்ளை. ஒரு வாரம் கழித்து மேனேஜர் அழைத்து... நீ என்னை மீறி டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாம்னு நினைக்கிறியா? டைரக்டர் பேசினார். எப்படி நீ பேறன்னு பார்ப்போம்... என்று கூறி நான் டைரக்டருக்கு அனுப்பிய கடிதத்தை என் கண் முன்னாலயே குப்பைத் தொட்டியில் போட்டார்.

ஐயயோ... இந்த மனுஷன்கிட்ட வசமா மாட்டிக்கிட்டோம்னு நினைச்சு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சேன். அப்பதான் அண்ணாமலையார் என் மனதில் தோன்றினார். அண்ணாமலையாரிடம் வேண்டினால் கண்டிப்பாக நடக்கும் என்று நண்பர்கள் தங்கள் அனுபவத்தை சொன்னது நினைவுக்கு வந்தது. பவுர்ணமி தினத்தில் கிரிவலம் சென்றேன். முழுக்க முழுக்க டிரான்ஸ்பர் வேண்டும் என்ற ஒரேயரு கோரிக்கையை மட்டும் அண்ணாமலையாரிடம் வேண்டினேன்.

அதற்கு அடுத்த ஓரிரு வாரங்களில் டைரக்டர் வேறு வேலையாக வேலூர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை வழக்கம் போலவே எல்லா ஸ்டாப்களும் சென்று பார்த்தோம். நான் டைரக்டர் அறைக்குள் சென்றதும் ஆச்சர்யம் காத்திருந்தது...! நீங்கதானே செந்தில்...? டிரான்ஸ்பர் கேட்டிருந்தீங்கள்ல? என்றார். நான் ஆமாம் சார் என்றேன். சென்னையில் ஹெட் ஆபீஸில் ஒரு வேகண்ட் இருக்கு. வர்றீங்களா? என்றார். பிராஞ்ச் ஆபீஸே கிடைக்காது என நினைத்த எனக்கு ஹெட் ஆபீஸில் வேலையென்றால் சும்மாவா? அல்வா சாப்பிடுவது போல இருந்தது. சட்டென டபுள் ஓ.கே. சொன்னேன். அடுத்த ஓரு வாரத்தில் எனக்கு பதிலாக புதிய ஊழியர் வேலூருக்கு வந்தார். அவருக்கு டிரைனிங் கொடுத்து விட்டு பிரியா விடை பெற்றேன்.

மேனேஜரிடம் போய் சொல்லும்போது அவரது முகம் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருந்தது. ஆனாலும் அவர், பரவாயில்லை. சாதிச்சிட்டியேய்யா... என்று சொன்னதுடன். சரி... நல்லா இருன்னு சொல்லி வாழ்த்தி வழியனுப்பினார். அவரது வாழ்த்தும் பலித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.

இன்றும் சக நண்பர்களிடம் பேசும்போது எப்பவாவது அண்ணாமலையாரின் புகழை சொல்லாமல் இருப்பதில்லை.

பதிவுலக நண்பர்களே... நீங்களும் ஒருமுறை அண்ணாமலையாரை சென்று வழிபட்டு, கிரிவலம் வாருங்கள். வளம் பெறுங்கள். நினைத்தது நடக்கும்!

நான் புதுமுகம்... உங்களுக்கு ஒரு அறிமுகம்

வணக்கம் நண்பர்களே...

நான் செந்தில். எத்தனை நாட்கள்தான் வலைபதிவுகளை படித்துக் கொண்டே இருப்பது... நாமும் நம்ம எழுத்தை மற்றவங்களை படிக்க வைத்து கொடுமை(?) படுத்தினால் என்ன? என்ற கேள்வி என் மனதில் தோன்றியதால்தான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். விஜய் டி.வி.,யில் லொல்லு சபா என்ற புரோகிராம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் இந்த லொல்லுசபாவை தொடங்கியிருக்கிறேன். இது காமெடி சபா அல்ல. நாட்டு நடப்புகளை அலசும் சபா.

என்னைப் பற்றி சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை. எதையும் எதிர்பாராமல் தொடர்வது நட்பு மட்டுமே! என்பதை நான் உணர்ந்துள்ளபடியால், நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கும் இந்த லொல்லுசபாவுக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

லொல்லு சபா

இது காமெடி சபா அல்ல : நாட்டு நடப்புகளை அலசும் சபா

TEST

TEST