நட்புக்கு ஒரு இலக்கணம் இவன்தான்! அனுபவ பதிவு



இந்த பதிவு என்னுயிர் நண்பன் சிரோன்மணிக்கு சமர்ப்பணம்!!

சிரோன்மணி...! திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, அங்கேயே வளர்ந்து சென்னை, திருச்சியில் சிலபல அனுபவங்களை பெற்று இன்று துபாயில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு நல்ல ஆத்மாவின் பெயர்தான் இது!! ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை நானும், அவனும் எங்களது சொர்க்கபூமியான பெத்தநாடார்பட்டி எனும் கிராமத்தில் உள்ள டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தோம். அதன் பின்னர் அவனுடைய ட்ராக் ஒருபுறமும், என்னுடைய ட்ராக் இன்னொரு புறமும் மாறிவிட்டது.

நான் படித்துவிட்டு 1998ல் வேலைக்காக ‌வேலூர் சென்றேன். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு டிரான்ஸ்பர். மயிலாப்பூரில் தங்கியிருந்தேன். அப்போது சிரோன்மணியும் சென்னைக்கு ‌பணிநிமித்தமாக வந்தான். சிரோ சென்னை வந்திருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் அவனை ‌பார்க்க வேண்டும் என நினைத்ததோடு சரி... ஆனால் அவனை நேரில் சென்று பார்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் உடனடியாக எடுக்கவில்லை. அதேநேரம் என் சிரோ நான் இருக்கும் இடத்துக்கே தேடி வந்து என்னை பார்த்தான். அவனுள் எத்த‌னை மாற்றங்கள். பார்த்து பூரித்து விட்டேன். எங்களூடன் பள்ளியில் படித்தவர்களிலேயே சிறுவன் போல காட்சியளித்த சிரோன்... தோற்றம் மாறாமல் இருந்தான். ஆனால் அவனது பேச்சில் சிலபல அனுபவ வார்த்தைகளை கேட்டேன்.

அவன் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கியிருந்தான். மேன்சனில் கஷ்ட நஷ்டங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டான். சரி... விடு டா! விரைவில் நாம் இருவரும் சேர்ந்து ஒரு வீடு வாடகைக்கு பிடித்து அங்கு தங்குவோம் என்றேன். அதன்படி மந்தைவெளியில் வீடு பார்த்தோம். ஒரு நல்ல நாளாக பார்த்து இருவரும் அங்கு குடியேறினோம். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் வழக்கம்போலவே ஓட்டல்களில் சாப்பிட்டோம். சம்பள நாளை எதிர்பார்த்து காத்திருந்தோம். சம்பளம் வந்ததும் மண்எண்ணெய் ஸ்டவ் மற்றும் பாத்திரங்கள், மளிகை சாமான்கள் என் சமைப்பதற்கு தேவையான அத்தனையும் வீட்டில் ஆஜர்.

வீட்டில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு, சமைத்து சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதே? அந்த இனிமையான பொழுது இனியொருமுறை கிடைக்குமா? என்ற ஏக்கம் இன்னும் என்னுள் எழத்தான் செய்கிறது. காலையில் நான் எழுவதற்குள் அவன் எழுந்து விடுவான். கடைக்கு போய் பால் வாங்கி வந்து, காபி போட்டு விட்டு என்னை எழுப்புவான். (ஒருநாள் கூட அவனுக்கு நான் காபி போட்டுக் கொடுத்தது கிடையாது. அவனுக்கு முன்னாள் எழுந்ததும் கிடையாது.) எனக்கு பெரிய அளவில் சமைக்க தெரியாது. ஆனால் சிரோன் சமையலில் செம கில்லாடி. நான் ஏதாவது செய்கிறேன் என்றால்கூ‌ட நீ பாட்டுககு சும்மா இரு. நான் பார்த்துக்கிறேன் என்பான். நான் விடாப்பிடியாக இருந்து காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன் என்கிற‌ பெயரில் காரட்டை கடித்துக் கொண்டிருப்பேன். கொஞ்ச நாளில் எனக்கும் சமைக்கத் தெரிந்து விட்டது (உபயம் சிரோ). இன்று நான் நன்றாக சமைத்து என் மனைவியிடம் நற்பெயர் (?) எடுத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நண்பன் சிரோதான்...!

சிரோவிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் என்று சொன்னால் அவனுடைய பொறுமை முதலில் பிடிக்கும். நான் எதையும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்கிற ரீதியில்தான் பேசுவேன். எந்த காரியத்‌தையும் அப்படித்தான் செய்து கொண்டிருப்பேன். ஆனால் அவனோ... எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துப் பார்த்து பொறுமையுடன் செய்வான். என்னிடமும் அடிக்‌கடி அந்த அட்வைஸைத்தான் சொல்வான். அடுத்து குறிக்கோள்...! முயற்சி செய்... அதற்கான பலன் இன்று கிடைக்காவிட்டாலும் என்றாவது கண்டிப்பாக ஒருநாள் கிடை‌க்கும் என்று அடிக்கடி சொல்வான். அவனது இந்த வார்த்தைகள்தான் என்னை இன்றும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சென்னையில் பணியாற்றிய அவனுக்கு திருச்சியில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் வாங்கியதை விட இரண்டுமடங்கு அதிக சம்பளம். ஆனால் அவனது மனது குழப்பத்தில் இருந்தது...! நண்பனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, திருச்சி செல்வதா, வேண்டாமா? என்பதுதான் அந்த குழப்பம். ஒரு நாள் இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவன் என்னிடம், என்ன செய்வதென்று புரியவில்லை என்று புலம்பினான். இங்க நாம இப்படி ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கோம். திருச்சிக்கு போனா இந்த எஞ்சாய்மெண்ட் எல்லாம் போயிடும்...! திருச்சிக்கு... போகவா? வேண்டாமா என குழப்பமாக இருக்கிறது என்றான். எதற்குமே புலம்பாதவன்... ஏன் இப்படி புலம்புகிறான் என எனக்கு தோன்றியது. எனக்கும் அவனைப் பிரிய மனமில்லை...! இருந்தாலும் அவனது எதிர்காலத்தை மனதில் வைத்து..., டேய்... எங்கடா போற... திருச்சிக்குத்தானே...! நினைச்சா 6 மணி நேரத்தில் சென்னை வரலாம்... நானும் திருச்சி வரலாம்..., எதிர்காலத்தை முதலில் பார்... என்று முதன் முதலில் நான் அவனுக்கு அ‌ட்வைஸ் செய்தேன்.

அவனும் புறப்பட்டான்...! அங்கு சுமார் 2 ஆண்டுகள் வரை வேலை பார்த்த அவனது மனதில் அடுத்த லட்சியம் தொற்றிக் கொண்டது. வீட்டின் கஷ்‌டத்தை தீர்க்க... சீக்கிரமே இன்னும் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும் என எண்ணினான். ஒரே மாதத்தில் திருச்சியில் இருந்து ஐந்தாறு முறை சென்னைக்கு வந்தான். பல இன்டர்வியூக்களில் பங்கேற்றான். அவனது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இன்று துபாயில்... நல்ல நிலையில்... இருக்கிறான். அவனது அம்மா, அப்பா, அண்ணன்கள், சகோதரி என அத்தனைபேரின் கண்களிலும் சிரோ துபாய் போகிறான் என நினைத்து ஆனந்த கண்ணீர் வடிந்தது. நானும் பெருமைப்பட்டேன். என்னுடன் படித்த நண்பர்களில், என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்த நண்பர்களில் முதன் முறையாக ஒருவன் வெளிநாட்டுக்கு செல்கிறான் என நினைத்தபோது என்மனம் ஆகாயத்தில் பறந்தது. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால்...

துபாய் போய் சேர்ந்ததும் அவன் நல்லபடியாக வந்திறங்கியதை போனில் தெரிவித்தான். அடுத்த சில தினங்களில் அவனிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அவன் அங்கு நல்ல நிலையில் இல்லை... என்பது அவனது குரல் காட்டிக் கொடுத்தது. துபாயில் தங்கு‌வதற்கு இன்னும் இடம் செட் ஆகவில்லை, சாப்பாடு சரியில்லை என சிலபல குறைகளை சொன்னான். என் கண்களில் கண்ணீர் வடிந்தது. (வேலைக்காக துபாய் சென்று எத்தனையோ பேர் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்ட சம்பவங்களை பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்). அதுமாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது என மனமுருக என்னிஷ்ட தெய்வம் முருகனிடம் வேண்டினேன். அடுத்து சில தினங்களில், நான் நல்லா இருக்கிறேன் டா! கவலைப்படாதே... என மெயில் சிரோ அனுப்பினான். அப்பாடா... என நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

அதன் பிறகு ஓராண்டு கழித்து ஆடி மாதம் கோயில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தான். (எங்கள் ஊரில் இருக்கும் அருள்‌மிகு மாயாண்டி கோயில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த திருவிழா இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி நடைபெற இருக்கிறது. திருவிழா முடிந்த பின்னர், திருவிழா அனுபடங்களை எழுதுகிறேன்). அவனது வீட்டில் எல்லோரும் ஆஜர். நானும் ஆஜரானேன். அப்பா, அம்மா மற்றும் சொந்தபந்தங்கள் ‌சிரோனைப் பார்த்து பெருமைப் பட்டதை நினைத்து நானும் ‌பெருமைப்பட்டேன். அவன் சாதித்து விட்டான்...! எங்கள் கிராமத்தில் மேலும் சிலர் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றினால், அந்த நாட்டு பிரஜையாகவே வசித்து வந்தாலும், அவர்கள் எல்லோரையும் விட குறைந்த வயதுடைய சிரோன்மணி துபாய் சென்று திரும்பியது எனக்கு பெருமிதமாகவே தோன்றியது. அதன் பிறகு சிரோனின் அண்ணன் திருமணத்துக்கு அவன் வந்தான். எனது அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காததாலும், அவன் கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததாலும் என்னால் அவனையும், அவனால் என்னையும் சந்திக்க முடியாமல் போய் விட்டது...!

அடுத்து சிரோ எப்போது வருவான்? என் கேள்வியுடன் நட்புக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த நண்பனுக்காக காத்திருக்கிறேன்.

இந்த நீண்ட பதிவை படித்த நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் எனதன்பு நண்பன் சிரோவைப் போல நண்பன் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உண்மையான நட்பு மட்டுமே எதையும் எதிர்பாராமல் தொடர்வது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அந்த உண்மையான நட்புக்கு பெருமை சேர்ப்போம். சந்தோஷப்படுவோம்...!

இந்த பதிவு என்னுயிர் நண்பன் சிரோன்மணிக்கு சமர்ப்பணம்!! என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்...!

6 comments:

Ganeshkumar said...

Nalla natpu. Vaalthukal lollusaba

கிரி said...

//நண்பனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, திருச்சி செல்வதா, வேண்டாமா? //

என் நண்பர்களை பிரிந்த போதும் இப்படி தான் தோன்றியது

//உண்மையான நட்பு மட்டுமே எதையும் எதிர்பாராமல் தொடர்வது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். //

நானும்

நான் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு என் நண்பர்களும் முக்கிய காரணம்...நான் சிங்கப்பூர் வரக்கூட இவர்களே காரணமாக இருந்தனர்.

செந்தில் ரொம்ப நல்லா நட்பை பற்றி எழுதி இருக்கீங்க.. என் நண்பர்கள் அனைவரையும் நினைவுபடுத்திட்டீங்க.

நீங்களும் ஒரு நல்ல நண்பர் எனும் போது எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது

லொல்லு சபா said...

என் நட்புக்கு மரியாதை கொடுத்து பின்னூட்டமிட்ட கணேஷ்குமார் மற்றும் நண்பர் கிரிக்கு நன்றிகள்...!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

அது ஒரு கனாகாலம்....🌹🌹

Madurai Venugopal said...

என் இளமைக்காலத்திற்கு அழைத்துச்சென்றீர்கள் சரி, ஆனால் என்னை அங்கேயே தொலைக்காமல் திரும்ப இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டீர்களே இது சரியா? (அழகான நினைவு! அற்புதமான பதிவு!)

Post a Comment

உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.