திருவண்ணாமலை கிரிவல மகிமையும், என் அனுபவமும்
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இல்லாத புகழ் ஒன்று நம் தாய்த் தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு இருக்கிறது என்றால் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே...! பொதுவாக கோயில்களுக்கு சென்று சாமி கும்பிட்டால்தான் புண்ணியம், முக்தி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும் கோயிலையும், அந்த கோயில் உள்ள தெய்வத்தையும் நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஆச்சர்யமான விஷயமே!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைப் பற்றி இதற்கு முன்பு அறிந்தவர்களுக்கு நான் சொல்லும் தகவல்கள் தெரிந்திருக்கக் கூடும். இன்னமும் அண்ணாமலையாரைப் பற்றி அறியாத நண்பர்களுக்காகத்தான் இந்த அனுபவக் கட்டுரை.
திருநெல்வேலிக்காரனான எனக்கு சிறுவயதில் எல்லாம் அண்ணாமலையாரைப் பற்றி எதுவும் தெரியாது. ஏன்... திருவண்ணாமலை என்று ஒரு ஊர் இருக்கிறது என்று கூட தெரியாது. படித்து விட்டு வேலைக்காக முதன் முதலில் நான் சென்ற ஊர் வேலூர். வேலூர், திருவண்ணாமலை எல்லாம் அந்தக்கால வட ஆர்க்காடு மாவட்டத்தை சேர்ந்த பகுதிகள். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் என்று ஒரு புனித நடை பயணத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் என்ற செய்தியை தினத்தந்தியில் படத்துடன் போட்டிருந்தார்கள். அதனை படித்து பூரித்து விட்டேன். புதிதாக சேர்ந்த அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் சிலரும் கிரிவலத்துக்கு சென்று திரும்பினார்கள். விடிய விடிய கண்விழித்து அண்ணாமலையார் இருக்கும் திருவண்ணாமலையை சுற்றி வந்ததாக சொன்னார்கள். டூட்டி முடிந்த பின்னர் புறப்பட்டு சென்ற அவர்கள் மறுநாள் காலையில் ரூமிற்கு வந்து சேர்ந்தார்கள். அதன் பின்னர் குளித்து விட்டு சற்றுநேரம் கூட தூங்காமல் மீண்டும் டூட்டிக்கு வந்து விட்டார்கள்.
என்ன நண்பா..? தூக்கம் வரலியா? என்று கேட்டதற்கு கிரிவலம் போனால் டயர்ட் இருக்காது! என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த மாதம் கண்டிப்பாக கிரிவலத்துக்கு நாமும் போய்விட வேண்டியதுதான் என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்து இரண்டு பவுர்ணமிகளில் என்னால் போக முடியவில்லை. ஒருவழயாக மூன்று மாதங்கள் கழித்து வந்த ஒரு பவுர்ணமி தினத்தில் கிரிவலத்துக்கு தயாரானேன். வேலூரில் இருந்து ஏகப்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை சென்று பார்த்தால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், தனியார் பஸ்கள், வேன், கார்களில் வந்து பக்த கோடிகள் குவிந்து கொண்டிருந்தார்கள்.
அண்ணாமலையார் கோயிலில் பிரதான கோபுரத்தில் தொடங்கி மலையை வலம் வர புறப்பட்டோம். அப்பப்பா... மலையை சுற்றிலும் 14 கி,மீ. சாலையிலும் பக்தர்களின் தலைகள்தான் தென்பட்டன. அப்படியே பிரமித்துப் போய் விட்டேன்.
கிரிவலம் முடிந்து வழக்கம்போல சாமி கும்பிட்டு விட்டு வேலூர் திரும்பினேன். இன்னொரு ஆச்சர்யம்...! எந்தவித டயர்டும் எனக்கு இல்லை. வழக்கம்போலவே பணிக்கு சென்றேன். அடடா... இப்படியரு சக்தியா அந்த அண்ணாமலையாருக்கு... என நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் கிரிவலத்துக்கு செல்ல வேண்டும் என நினைப்பேன். நேரம் மற்றும் பணிச்சுமை இல்லாத நாட்களில் பவுர்ணமி வரும்போது திருவண்ணாமலை போகத் தவறுவதில்லை.
நினைத்தது நடந்தது
இப்படியே ஓராண்டுகள் ஓடின. நான் பணியாற்றிய அலுவலகத்தின் மேலாளருக்கும், எனக்கும் சிறு பிரச்சினை. மேனேஜரிடம் முறைத்துக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. எப்படியாவது எமது அலுவலகத்தில் வேறு கிளைக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்தேன். அதே (பகையாளி) மேனேஜரிடமே டிரான்ஸ்பர் வாங்கித் தருமாறு கேட்டேன். வசமா ஒருத்தன் சிக்குனா எந்த மேனேஜருக்குத்தான் பிடிக்காமல் போகும். நான் எழுதிக் கொடுத்த கோரிக்கை மனு கடிதத்தை அடுத்த நாள் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தேன். நேரடியாக நிறுவன இயக்குனருக்கு தபாலில் டிரான்ஸ்பர் கேட்டு கடிதம் எழுதினேன். நோ... ரிப்ளை. ஒரு வாரம் கழித்து மேனேஜர் அழைத்து... நீ என்னை மீறி டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாம்னு நினைக்கிறியா? டைரக்டர் பேசினார். எப்படி நீ பேறன்னு பார்ப்போம்... என்று கூறி நான் டைரக்டருக்கு அனுப்பிய கடிதத்தை என் கண் முன்னாலயே குப்பைத் தொட்டியில் போட்டார்.
ஐயயோ... இந்த மனுஷன்கிட்ட வசமா மாட்டிக்கிட்டோம்னு நினைச்சு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சேன். அப்பதான் அண்ணாமலையார் என் மனதில் தோன்றினார். அண்ணாமலையாரிடம் வேண்டினால் கண்டிப்பாக நடக்கும் என்று நண்பர்கள் தங்கள் அனுபவத்தை சொன்னது நினைவுக்கு வந்தது. பவுர்ணமி தினத்தில் கிரிவலம் சென்றேன். முழுக்க முழுக்க டிரான்ஸ்பர் வேண்டும் என்ற ஒரேயரு கோரிக்கையை மட்டும் அண்ணாமலையாரிடம் வேண்டினேன்.
அதற்கு அடுத்த ஓரிரு வாரங்களில் டைரக்டர் வேறு வேலையாக வேலூர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை வழக்கம் போலவே எல்லா ஸ்டாப்களும் சென்று பார்த்தோம். நான் டைரக்டர் அறைக்குள் சென்றதும் ஆச்சர்யம் காத்திருந்தது...! நீங்கதானே செந்தில்...? டிரான்ஸ்பர் கேட்டிருந்தீங்கள்ல? என்றார். நான் ஆமாம் சார் என்றேன். சென்னையில் ஹெட் ஆபீஸில் ஒரு வேகண்ட் இருக்கு. வர்றீங்களா? என்றார். பிராஞ்ச் ஆபீஸே கிடைக்காது என நினைத்த எனக்கு ஹெட் ஆபீஸில் வேலையென்றால் சும்மாவா? அல்வா சாப்பிடுவது போல இருந்தது. சட்டென டபுள் ஓ.கே. சொன்னேன். அடுத்த ஓரு வாரத்தில் எனக்கு பதிலாக புதிய ஊழியர் வேலூருக்கு வந்தார். அவருக்கு டிரைனிங் கொடுத்து விட்டு பிரியா விடை பெற்றேன்.
மேனேஜரிடம் போய் சொல்லும்போது அவரது முகம் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருந்தது. ஆனாலும் அவர், பரவாயில்லை. சாதிச்சிட்டியேய்யா... என்று சொன்னதுடன். சரி... நல்லா இருன்னு சொல்லி வாழ்த்தி வழியனுப்பினார். அவரது வாழ்த்தும் பலித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.
இன்றும் சக நண்பர்களிடம் பேசும்போது எப்பவாவது அண்ணாமலையாரின் புகழை சொல்லாமல் இருப்பதில்லை.
பதிவுலக நண்பர்களே... நீங்களும் ஒருமுறை அண்ணாமலையாரை சென்று வழிபட்டு, கிரிவலம் வாருங்கள். வளம் பெறுங்கள். நினைத்தது நடக்கும்!
4 comments:
உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.
//பதிவுலக நண்பர்களே... நீங்களும் ஒருமுறை அண்ணாமலையாரை சென்று வழிபட்டு, கிரிவலம் வாருங்கள். வளம் பெறுங்கள். நினைத்தது நடக்கும்! //
கிரிக்கே கிரி வலமா! :-)))
செந்தில் ரொம்ப நாளா திருவண்ணாமலை சென்று வர வேண்டும் என்பது என் ஆசை.. இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது.. பார்ப்போம்
//ரொம்ப நாளா திருவண்ணாமலை சென்று வர வேண்டும் என்பது என் ஆசை//
திருவண்ணாமலைனு நினைச்சதால் அண்ணாமலையாரோட அருள் தங்களுக்கு கிடைத்து விட்டது. நினைத்தாலே அருள் தரும் அந்த அண்ணாமலையாரை நேரில் சென்று பார்த்தால் கோடாணுகோடி புண்ணியம் கண்டிப்பாக கிடைக்கும். விரைவில் திருவண்ணாமலை தரிசனத்துக்கு சென்று வாருங்கள் நண்பரே.
Unlike other temples where u have to go inside the temple to see the lord, in Thiruvannamalai the lord has manifested as the very Hill itself. Seeing the hill is seeing the lord in that place. Why seeing even thinking of the Hill is sufficient. Sadguru saranam.
Post a Comment
உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.