கவர்ச்சியை பார்த்து ஏமாந்துடாதீங்க...! ஒரு உஷார் ரிப்போர்ட்
ஒரு காலத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடைக்கு சென்று வந்த நிலை மாறி, இன்று மால் என்ற பெயரில் எல்லாமும் ஒரே இடத்தில் என்கிற நிலை உருவாகி வருகிறது. சென்னையில் தொடங்கி குமரி முனை வரை எல்லா இடங்களிலும் மால் கலாச்சாரம் பெருகி விட்டது. இந்த மால்களால் எந்த அளவுக்கு பயன் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பின்மையும் இருக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம் வாசகர்களே...! இந்த மால்களில் சமையலுக்கு பயன்படும் எண்ணெய் முதல் நொறுக்குத்தீனி வரை எல்லாமுமே பல வண்ண வண்ண பாக்கெட்டுகளில் இருப்பதால் அவை பலரையும் வாங்கத்தூண்டுகின்றன. இந்த கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளை பார்க்கும்லோதே ஒரு முறை வாங் பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்று பலரும் நினைக்கின்றனர். நூற்றுக்கணக்கில் பணத்தை கொடுத்து வாங்கியும் செல்கிறார்கள். தரமான பொருட்கள் எவை என்று தெரியாமல் கவர்ச்சி பாக்கெட்டுகளை பார்த்து உணவுப்பண்டங்களையும், உணவுப்பொருட்களையும் அள்ளிச் செல்லும் பெண்கள், இந்த ரெடிமேட் பாக்கெட்டுகளால் சமையலும், சகலமும் சுலபமாகி விடுகிறது என்கிறார்கள்.
ஆனால் அந்த பொருளின் மூலம் எந்த அளவுக்கு கொழுப்பு உட்பட தேவையற்ற சத்துக்கள் உடலுக்குள் போகின்றன என்று யாருக்கும் தெரியாது. பாக்கெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களையும் யாரும் படிப்பதில்லை என்பதே வேதனையான உண்மை.
சரி.. மால்களில் எப்படித்தான் பொருட்களை வாங்குவது? கொழுப்பு குறைந்த, சர்க்கரை இல்லாத பண்டங்களும் பாக்கெட்டுகளாக மால்களில் கிடைக்கும். டயட் பொடேட்டோஸ், கொலஸ்ட்ரால் குறைந்த கொட்டை வகைகள், கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணெய், சோயா பொருட்கள், சர்க்கரை இல்லாத சாக்லெட், ஹெல்த் டிரிங்ஸ், ஓட்மீல், ஆர்கானிக் பருப்புகள் போன்றவை விற்கப்படுகின்றன. இவற்றில் உள்ள சத்துக்கள் எல்லாம், பாக்கெட்டில் போட்டபடி இருக்கும் என்று நம்ப முடியாது; அதனால், தரமான நிறுவனங்களின் தயாரிப்பு தானா என்று பார்த்து வாங்குவதும் முக்கியம்.
பல ஆண்டுக்கு முன்பு விவசாயிகள், உரம், பூச்சி மருந்து போடாமல் பயிர் செய்தனர். ஆனால் இப்போது...? விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்று, உரம், பூச்சி மருந்துகளை பயன் படுத்தப்படுகின்றன. தற்சமயம் நாம் சாப்பிடும் கீரையில் இருந்து தானியங்கள், பழங்கள் வரை அனைத்துமே உரம் பாய்ந்ததுதான். இதனை உணர்ந்து கொண்ட அமெரிக்கர்கள் மத்தியில் இப்போது கொடிகட்டிப் பறப்பது ஆர்கானிக் புட்தான். இயற்கையான இந்த ஆர்கானிக் புட் இன்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. சாதாரண உணவில் இருந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களின் விலை 50 முதல், 100 சதவீதம் அதிகம். தக்காளியில் இருந்து அரிசி வரை எல்லாம் உரம் போடாமல் பயிராக்கி தரப்படுகிறது.
அப்படிப்பட்ட உணவுகளில், வைட்டமின், கனிமம், புரதம் எல்லாம் முழுமையாக கிடைக்கும். இந்த வகை உணவுகளும் பெரும்பாலான மால்களில் விற்கப்படுகின்றன. அவற்றை பார்த்து வாங்கி பயன்படுத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை.
பொதுவாக கவர்ச்சிகர சிப்ஸ் பாக்கெட்களில், இது ப்ரை பண்ணப்பட்டதல்ல, பேக்டு செய்யப்பட்டது. அதனால், கொழுப்பு இருக்காது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில், நிலைமை அப்படியல்ல. உருளை போன்ற சிலவற்றில் அடிப்படையில் உள்ள கொழுப்பு சத்தை, வேக வைப்பதன் மூலம் நீக்கி விட முடியும் என்று சொல்ல முடியாது. பொரித்தால்தான் கொழுப்பு; வேக வைத்தால் இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் டாக்டர்கள் கருத்து. அதனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல் இருப்பதும் நல்லது.
4 comments:
நன்றி.. அருமையான தகவல்||
கருத்துக்கு நன்றி கலையரசன்.
this article has been copied in
http://annai-illam2.blogspot.com/2009/06/blog-post_524.html
//shirdi.saidasan@gmail.com said...
this article has been copied in
http://annai-illam2.blogspot.com/2009/06/blog-post_524.html//
தகவலுக்கு நன்றி சாய்தாசன். நான் சம்பந்தப்பட்ட பதிவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், இதுபோல காப்பி - பேஸ்ட் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், எனது வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையாவதுபோடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டேன். இந்நேரம் வரை அந்த பதிவர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
நண்பர்களே... இதுபோல காப்பி செய்பவர்களை கண்டிக்க யாருமே இல்லியா?
Post a Comment
உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.